முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும்
இன்று வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் என அமைச்சர் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா டோல்கேட் அருகே, இன்று (செவ்வாய்க்கிழமை) வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. செயலாளருமான ஆர்.காந்தி, விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி வழியில் தி.மு.க. ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றான, மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி எனும் முழக்கத்தை ஓங்கி ஒலித்து, இந்தியாவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக முன்னெடுத்து, சிறந்த முதல்-அமைச்சராக திகழும், மு.க.ஸ்டாலின், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க இருக்கிறார்.
இதற்காக வருகை தரும் அவருக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணியளவில் வாலாஜா டோல்கேட் பகுதியில் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. சார்பில் எனது தலைமையில் (அமைச்சர் காந்தி) எழுச்சிமிகு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சி காணும் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை வரவேற்க, தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் நிர்வாகிகள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள, மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய விழாக்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்பிக்கிறார். எனவே பொதுமக்கள், பயனாளிகள் மற்றும் தி.மு.க. வினர் திரளாக பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.