சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், மாணவர்கள், தொழில் துறையினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், மாணவர்கள், தொழில் துறையினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்
x

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் மற்றும் தொழில் துறையினருடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.

சேலம்

கள ஆய்வில் முதல்-அமைச்சர்

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரசு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார். 'கள ஆய்வில் முதல்-அமைச்சர்' என்ற புதிய திட்டத்தின் கீழ் கடந்த 1 மற்றும் 2-ந் தேதி வேலூர் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று அங்கு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான ஆய்வு செய்வதற்காக நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் வந்தார். அவர் ஓமலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தார். அங்கிருந்து சேலம் வந்த அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கலந்துரையாடல்

இதையடுத்து சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் தொழில் துறையினருடன் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு தொழில் நிறுவனங்களின் சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்காக அரசு அளித்து வரும் ஆதரவு மற்றும் சலுகைகளுக்கு தங்களது நன்றிகளை முதல்-அமைச்சருக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கத்தினர் தெரிவித்துக் கொண்டனர். மேலும், சேலம் சிட்கோ தொழிற்பேட்டையில் சிறு மற்றும் குறுந் தொழிற்சாலைகள் சங்கத்திற்கு தனி அலுவலகம், பயிற்சி மற்றும் கூட்ட அரங்கம் அமைத்திட ஏதுவாக இடஒதுக்கீடு மற்றும் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை வரைமுறைப்படுத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

ஓசூர் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் சார்பில் ஓசூரில் விமான நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. விவசாய சங்கங்களின் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியில் தென்னை ஆராய்ச்சி மையம் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலை தொடங்க வேண்டும் என்றும், தர்மபுரி மாவட்டத்தில் சிறுதானிய உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான தொடர்பு ஏற்படுத்த தேசிய அளவில் வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு கூட்டம் நடத்திட உதவி செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

மாம்பழக்கூழ் ஏற்றுமதி மையம்

மேலும் முதல்நிலை சிறுதானியம் பதப்படுத்தும் மையம் மற்றும் சேமிப்புக் கிடங்கு அமைத்து தர வேண்டும் என்றும், வேளாண்மை தொடர்பான செய்திகளுக்காக "விவசாயிகள் பண்பலை" நிலையம் அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் சங்கம் சார்பில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் போது கிடைக்கும் தோல், நார் போன்ற கழிவுகளை கொண்டு இயற்கை எரிவாயு ஆலை அமைத்து தர வேண்டும். ஏற்றுமதி மையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். பையூர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மாம்பழ சாகுபடிக்கான தனித்துறையை உருவாக்கி தர வேண்டும் என்றும் முதல்- அமைச்சரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர்.

ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் ரொக்க கடன் வட்டி மானியம் அளித்திடவும், சேகோ மற்றும் ஸ்டார்ச்சுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும், மதிப்புக் கூட்டு பொருட்களை தயாரிக்க சேகோசர்வ் மூலம் ஆராய்ச்சிக்கூடம் அமைத்திட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

கோரிக்கைகள் பரிசீலனை

அனைத்து மாவட்ட லாரி பாடி கட்டும் சம்மேளனம் சார்பில் நாமக்கல் மாவட்ட லாரி பாடி கட்டும் தொழிற்பேட்டையில் தொழில் தொடங்குவதற்கு ஏதுவாக அனைத்து தொழிலங்களுக்கும் ஒரே வடிவமைப்பில் ஷெட் அமைக்கவும், தொழில் செய்ய உபகரணங்கள் வழங்கவும் நிதியுதவி அளித்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மலையக பகுதி பழங்குடி மக்கள் சார்பில் தங்கள் பகுதியில் சாலை வசதிகள் மற்றும் கால்நடை மருத்துவமனை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பல்வேறு சங்கங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவற்றை பரிசீலித்து உரியவற்றை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார்.

மகளிர் சுயஉதவிக்குழுவினர்

மேலும், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருவதற்காக மகளிர் சுயஉதவிக் குழுவினர் முதல்-அமைச்சருக்கு தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர். பின்னர் அவர்கள் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு மேலும் பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கலந்துரையாடலின்போது, தலைமைச் செயலாளர் இறையன்பு, மாவட்ட கலெக்டர்கள் கார்மேகம் (சேலம்), ஸ்ரேயா சிங் (நாமக்கல்), சாந்தி (தர்மபுரி), தீபக் ஜேக்கப் (கிருஷ்ணகிரி), பட்டு வளர்ப்புத் துறை இயக்குனர் விஜயா ராணி, சேகோசர்வ் மேலாண்மை இயக்குனர் பூங்கொடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நான் முதல்வன் திட்டம்

தொடர்ந்து நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, இந்த திட்டத்தின் கீழ் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள், திறன் மேம்பாடு பயிற்சிகள் பெற்ற அனுபவத்தையும், அது வேலைவாய்ப்புக்கு எவ்வாறு பயன்பெற்றது என்பது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.


Next Story