சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிடுகிறார்


சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிடுகிறார்
x

சென்னையில் நடைபெறும் வெள்ளத்தடுப்பு பணிகளை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இந்த ஆண்டில் மழை அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே மழை காலத்தில் ஏற்படும் வெள்ளத்தை எதிர்கொண்டு சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் மழை வெள்ள தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலைகள் துறை, நீர்வளத்துறை, சென்னை மாநகராட்சி ஆகியவை இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

ஆனாலும் சில இடங்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படவில்லை என்றும், சில பகுதிகளில் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகளும் பரவலாக எழுந்துள்ளன.

இன்று ஆய்வு

ஏற்கனவே சென்னையில் இந்த பணிகளை பார்வையிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மீண்டும் இன்று சென்னையில் பல இடங்களில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பணிகளை துரிதமாக முடிக்க ஊக்கப்படுத்துகிறார்.

இந்த ஆய்வு பணியை காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு நிறைவு செய்கிறார்.

எந்தெந்த இடங்கள்?

அந்த வகையில் அசோக் நகர், கொளத்தூர் வேலவன் நகர், டாக்டர் அம்பேத்கார் கல்லூரி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டெமல்லோஸ் சாலை

பேசின் பிரிட்ஜ், வால்டாக்ஸ் ரோடு, ரிப்பன் கட்டிடம், என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.


Next Story