பெருந்துறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்


பெருந்துறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும்  விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்
x

பெருந்துறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு

பெருந்துறை

பெருந்துறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழா பணிகள் தீவிரம்

பெருந்துறைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார். அங்குள்ள சரளை பகுதியில் நடக்கும் அரசு நலத் திட்ட விழாவில் கலந்து கொண்டு, முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், இனி தொடங்கவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதற்காக, பெருந்துறை- கோவை ரோட்டிலுள்ள சரளையில் விழா ஏற்பாடுகள், கடந்த 4 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது.

3 பந்தல்கள்

விழாவிற்காக 3 பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பந்தல்களின் உட்புறங்கள் வண்ணமயமான துணிகளைக்கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா பந்தலின் கீழே அமரும் பார்வையாளர்கள், காற்றோட்டத்துடன் நிகழ்ச்சிகளை காணும் வகையில், ஏராளமான மின் விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளன.

விழா நடக்கும் மைதானத்தின் தொடக்கம் முதல், பந்தலின் முகப்பு வாயில் வரை, பார்வையாளர்கள் நடந்து செல்வதற்கு 20 அடி அகலத்தில் 300 அடி நீளத்தில் சிமெண்ட் கற்களால் ஆன நடை பாதையும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டை கொத்தளம்

நடைபாதையின் இரு புறமும், முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக அவருடைய படத்துடன் கூடிய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. விழா நடக்கும் இடத்தின் நுழைவு வாயில் கோட்டை கொத்தளம் போன்ற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சு.முத்துசாமியின் மேற்பார்வையில், பெருந்துறை ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் கே.பி.சாமி (தெற்கு), பி.சின்னச்சாமி (வடக்கு), மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணைத்தலைவர் குணசேகரன், ஒன்றிய சமூக வலைத்தள பொறுப்பாளர் செந்தில்குமார் மற்றும் பெருந்துறை தெற்கு- வடக்கு ஒன்றிய தி.மு.க. தொண்டர்கள் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.


Next Story