கருப்பூரில் இன்று நடைபெறும் அரசு விழாவில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்


கருப்பூரில் இன்று நடைபெறும் அரசு விழாவில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
x

சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் இன்று நடைபெறும் விழாவில் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

சேலம்

நலத்திட்ட உதவிகள்

சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி ேபசுகிறார்.

மேலும் அவர் அந்த விழாவில் மேட்டூர் மற்றும் எடப்பாடி நகராட்சிகளில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கும் பணிகள், போடிநாயக்கன்பட்டி ஏரி, மூக்கனேரி, அல்லிக்குட்டை ஏரி புனரமைத்து அழகுப்படுத்தும் பணிகள், முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்வேறு சாலைப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதுதவிர உத்தமசோழபுரம்-திருமணிமுத்தாற்றின் குறுக்கே மற்றும் தென்னங்குடிபாளையம்-வசிஷ்ட ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

கூட்டு குடிநீர் திட்டம்

விழாவில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.653 கோடியில் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூர், இடங்கணசாலை ஆகிய 5 பேரூராட்சிகள் மற்றும் சேலம், வீரபாண்டி, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 778 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில் முதற்கட்டமாக 301 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் ரூ.102 கோடியில் கட்டப்பட்டுள்ள சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான மாணவ, மாணவியர் விடுதிகளுடன் கூடிய நிரந்தர கட்டிடம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில் நேற்று அமைச்சர் கே.என்.நேரு, கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்ட அவர், பயனாளிகள் வந்து செல்வதற்கான வாகன வசதி, குடிநீர் வசதி, சுகாதார வளாகங்கள், இருக்கை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ததுடன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வரவேற்பு

இதனிடையே சேலம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவருக்கு அமைச்சர் கே.என்.நேரு புத்தகம் கொடுத்து வரவேற்றனர். இந்த வரவேற்பில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.


Next Story