திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணம்


திருவாரூர், நாகை மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் சுற்றுப்பயணம்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார். திருக்குவளையில் நடைபெறும் விழாவில் அரசு பள்ளிகளுக்கான காலை உணவு விரிவாக்க திட்டத்தை அவர் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவ்வப்போது வெளி மாவட்டங்களுக்கு அரசு முறை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களுக்கு சென்று வந்தார். அங்கு நடந்த அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிலையில் 4 நாள் பயணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து கும்பகோணத்திற்கு சாலை மார்க்கமாக செல்கிறார். அங்கு மாலையில் நடக்கும் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரிக்கான புதிய கட்டிட திறப்பு விழாவில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். பின்னர் நாகப்பட்டினத்திற்கு சென்று இரவு அங்கு தங்குகிறார்.

காலை உணவுத்திட்டம்

மறுநாள் 25-ந்தேதி காலை திருக்குவளைக்கு செல்கிறார். அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடங்கி வைக்கிறார்.

அன்று மாலை நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ஆய்வுக்கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், விவசாய சங்கங்கள் உள்பட பல்வேறு சங்கத்தினருடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

மாவட்ட கலெக்டர்களும், போலீஸ் அதிகாரிகளும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். இரவில் வேளாங்கண்ணிக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

சென்னை வருகை

அதனைத்தொடர்ந்து மறுநாள் 26-ந்தேதி காலையில் கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் நாகையில் இருந்து திருவாரூருக்கு சென்று இரவில் அங்கு தங்குகிறார்.

மறுநாள் 27-ந்தேதி திருத்துறைப்பூண்டி சென்று அங்கு நடைபெறம் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். (26-ந்தேதி இரவில் நடக்கும் இந்த திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் பங்கேற்றால், அவரது பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்படும்).

பின்னர் திருச்சிக்கு சென்று அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் பிற்பகல் சென்னை திரும்புகிறார்.


Next Story