முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட போட்டி: மோகனூர் அரசு பள்ளி மாணவிகள்-ஆசிரியர்கள் வெற்றி
முதல்-அமைச்சர் கோப்பை மாவட்ட போட்டியில் மோகனூர் அரசு பள்ளி மாணவிகள்-ஆசிரியர்கள் வெற்றி பெற்றனர்.
மோகனூர்:
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு திடலில் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். இதில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் மோகனூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி கீர்த்தனா உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்று ரூ.3 ஆயிரம் பெற்றார். 11-ம் வகுப்பு மாணவி ஸ்ரீ சிவநிதி 800 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதலில் முதலிடமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடமும் பிடித்து ரூ.7 ஆயிரம் பரிசு பெற்றுள்ளார். இதேபோல் இந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி சந்தியா குண்டு எறிதலில் இரண்டாம் இடம் பெற்று ரூ.2 ஆயிரமும், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் 12-ம் வகுப்பு மாணவி சோபனா பிரியா 100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று ரூ.2 ஆயிரமும் பரிசு பெற்றனர்.
அதேபோல் அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டியில் பள்ளியின் தமிழ் ஆசிரியர் வீரராகவன், நீளம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று ரூ.2 ஆயிரம் பரிசு பெற்றார். உடற்கல்வி ஆசிரியை ஜீவா, கைப்பந்து குழு போட்டியில், முதலிடம் பெற்று ரூ.3 ஆயிரம் பரிசு பெற்றார். பரிசு பெற்றவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சுடரொளி, உதவி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் வாழ்த்தினார்கள். போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.