கோழிப்பண்ணைகளை மூடக்கோரி ஆர்.டி.ஓ.அலுவலகம் முற்றுகை
கோழிப்பண்ணைகளை மூடக்கோரி ஆர்.டி.ஓ.அலுவலகம் முற்றுகை
தாராபுரம்
தாராபுரத்தை அடுத்த சின்னப்புத்தூர் மற்றும் சின்னக்காம்பாளையம் பகுதியில் செயல்படும் கோழிப்பணைகளை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆர்.டி.ஓ.அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்.டி.ஓ. குமரேசனிடம் மனுக்கொடுத்தனர்.
ஈ ெதால்லை
தாராபுரத்தை அடுத்துள்ள சின்னப்புத்தூரை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சுற்றி ஏராளமான கோழிப்பண்ணைகள் ஆரம்பித்து செயல்பட தொடங்கி உள்ளது. இதில் இருந்து வெளியேறும் ஈக்கள் தொல்லை நாளுக்கு நாள் பெருகி பொதுமக்கள் வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்து வருகிறது.
மேலும் சின்னபுத்தூர் கிராமத்தில் நஞ்சுண்டபுரத்தில் இருந்து புளியமரத்துபாளையம் செல்லும் சாலையில் சொந்தமான முட்டை கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து ஏராளமான ஈக்கள் வெளியேறி வருகிறது. இந்த கோழி பண்ணையில் உற்பத்தியாகும் ஈக்கள் அருகிலுள்ள கிராமம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. இதில் பொறுமை இழந்த மக்கள் மாவட்ட கலெக்டரிமும், சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முற்றுகை போராட்டம்
கோழிப்பண்ணை அமைக்க மத்திய அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வலியுறுத்தி உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு கோழி பண்ணைகளை அதன் உரிமைகளை நடத்தி வருகின்றனர். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோழிப்பண்ணைகளில் இருந்து கிராமங்களுக்கு படை எடுக்கும் ஈக்கள் தொல்லையால் நிம்மதியாக தூங்கவோ,சாப்பிடவோ முடியவில்லை, குறிப்பாக டீ குடிக்க கூட முடியவில்லை.
வீடுகளில் எங்கு பார்த்தாலும் ஈக்கள் சூழ்ந்து கொள்கிறது. ஆடு மாடுகளுக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால் மேற்பரப்பு முழுவதும் ஈக்கள் விழுந்து செத்து மிதக்கிறது. அந்த தண்ணீரை கால்நடைகள் குடிப்பதால் வயிற்று போக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே சின்னபுத்தூர் கிராமத்தைச் சுற்றி அனுமதியின்றி இயங்கும் கோழிப்பண்ணைகளை மூட மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு கொடுத்து முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஆர்.டி.ஓ.விடம் மனு
இதே போன்று சின்னக்காம்பாளையம் பேரூராட்சி பகுதியில் கடந்த 2 வருடங்களாக செயல்பட்டு வரும் கோழி பண்ணையால் சின்னக்காம்பாளையத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிய கவுன்சிலர் தெய்வசிகாமணி தலைமையில் ஆர்.டி.ஓ. குமரேசனிடம் மனு கொடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 பகுதியில் இருந்தும் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுவுக்கு ஆர்.டி.ஓ. குமரேசன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.