கடை வீதிகளில் குழந்தைகளுடன் குவிந்த பெற்றோர்
அனுப்பர்பாளையம்,
கோடை விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கு செல்வதற்கான பொருட்களை வாங்க கடை வீதிகளில் பெற்றோர் குழந்தைகளுடன் குவிந்தனர்.
பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. பள்ளிக்கு செல்வதற்காக மாணவர்களும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோரும் கடந்த சில நாட்களாக தயாராகி வருகின்றனர். இதையொட்டி தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி கட்டணத்தை செலுத்தி பாடப்புத்தகங்கள், பை உள்ளிட்டவற்றை பெற்றோருடன் வந்து வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளிக்கு செல்வதற்கான பொருட்களை வாங்குவதற்காக திருப்பூரில் உள்ள முக்கிய கடை வீதிகளில் பெற்றோர் குழந்தைகளுடன் குவிந்தனர். பென்சில், பேனா, பாக்ஸ், ரப்பர், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வாங்க ஸ்டேசனரி, பேன்சி கடைகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. மேலும் பள்ளி சீருடைகள் வாங்க ஜவுளி கடைகளுக்கும், காலணிகள் வாங்குவதற்காக செருப்பு கடைகளுக்கும் பெற்றோர் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.
கூட்டம்
இதனால் திருப்பூர் பழைய பஸ் நிலையம், மாநகராட்சி சந்திப்பு, ரெயில் நிலையம் சந்திப்பு, புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் நேற்றுடன் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் நேற்று ஏராளமானோர் குழந்தைகளுடன் மாநகராட்சி வெள்ளி விழா பூங்கா மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு குடும்பத்துடன் சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.