1½ வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம்
1½ வயது குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக அகற்றினர்.
பரமக்குடி,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கிளாக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. விவசாயி. இவரது 1½ வயது ஆண் குழந்தை அஜித் வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது ஒரு பாத்திரத்தை எடுத்து தலையில் மாட்டிக்கொண்டான். பின்னர் அந்த பாத்திரம் அவனது தலையில் சிக்கிக்கொண்டது.
அவன் அழுகை சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். தலையில் சிக்கிய பாத்திரத்தை அகற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை கொண்டு வந்தனர். குழந்தையின் தலையில் சிக்கி இருந்த பாத்திரத்தை அகற்ற தீயணைப்பு வீரர்கள் முயற்சித்தும் முடியவில்லை.
பின்னர் சற்று நேரம் போராடி, அந்த பாத்திரத்தை கருவியால் லாவகமாக வெட்டி அகற்றினர். பின்னர் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று குழந்தையை பரிசோதனை செய்தனர். குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததை தொடர்ந்து, வீட்டிற்கு அழைத்து சென்றனர்.