தண்ணீர் தொட்டிக்குள் 3 வயது குழந்தை தவறி விழுந்து பரிதாப சாவு
காங்கயம் அருகே தரைத்தள தண்ணீர் தொட்டிக்குள் 3 வயது குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
காங்கயம் அருகே தரைத்தள தண்ணீர் தொட்டிக்குள் 3 வயது குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தண்ணீர் தொட்டி
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே உள்ள சாம்பவலசு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மகன் அபிவர்ஷன் (வயது 3). நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே அந்த பகுதியை சேர்ந்த சில குழந்தைகளுடன் சேர்ந்து அபிவர்ஷன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் அவனை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அபிவர்ஷனை அக்கம்பக்கத்தில் தேடினார்கள். அப்போது அருகில் உள்ள ஒரு வீட்டின் தரைத்தள தண்ணீர் தொட்டியில் குழந்தை அபிவர்ஷன் தவறி விழுந்து கிடந்தான்.
பரிதாப சாவு
இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் அபிவர்ஷனை தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபிவர்ஷன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
இது குறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.