விழுப்புரம் மாவட்டத்தில் சிறுவர் காப்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் கலெக்டர் மோகன் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் சிறுவர் காப்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலாமேடு பகுதியில் சமூக பாதுகாப்புத்துறை சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழுமத்தில் நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குழந்தைகள் நலக்குழுமத்தில் உள்ள வளாகம், உணவு சமைக்கும் அறை, மாணவ- மாணவிகள் படுக்கும் அறை, கல்வி கற்பிக்கும் வகுப்பறை, தட்டச்சு பயிற்சி வழங்கும் பகுதி, குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை கலெக்டர் மோகன் உட்கொண்டு உணவின் தரம், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள உணவு தயாரிப்பதற்கான பொருட்களின் தரம், வளாகத்தை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு
அதன் பின்னர் காப்பகத்தில் உள்ள குழந்தைகளிடம் கற்றல் திறனை அறிந்துகொள்ளும் வகையில் வாய்ப்பாடு, திருக்குறள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து சிறந்த முறையில் திருக்குறள் ஒப்புவித்த குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினார்.
மேலும் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பான முறையில் கல்வியும், சுகாதாரமான சத்துமிக்க உணவுகளை வழங்க வேண்டும். குழந்தைகளின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பினை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று உத்தரவிட்டார்.
123 குழந்தைகள் உள்ளனர்
அதனை தொடர்ந்து கலெக்டர் மோகன், நிருபர்களிடம் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு அரசு குழந்தைகள் நல காப்பகமும், 4 தனியார் குழந்தைகள் நல காப்பகங்களும் இயங்கி வருகின்றன. இந்த காப்பகங்களில் தற்போது 123 குழந்தைகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இக்காப்பகங்கள் அனைத்தும் முறையாக பதிவுகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கட்டிடத்தின் உறுதித்தன்மை, சுகாதாரமான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அமைய பெற்று இருக்க வேண்டும். அதனடிப்படையில் தற்போது சாலாமேடு பகுதியில் உள்ள குழந்தைகள் நலக்குழுமத்தில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள பானாம்பட்டு கிருபாலாயா அறக்கட்டளை, வானூர் தாலுகா பெரிய முதலியார்சாவடியில் உள்ள எங்கள் வீட்டு சிறுவர் இல்லம், திண்டிவனம் தாலுகா அருவம்பாக்கம் காமராஜர் ஹோம் பார் காட்ஸ் சில்ரன், கண்டமங்கலம் சின்னபாபுசமுத்திரம் கருணைகரங்கள் ஆகிய காப்பகங்களில் அலுவலர்களை நியமித்து முறையாக காப்பகங்களை ஆய்வு செய்து பராமரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நீலம்பாள், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.