அ.பள்ளிப்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பலி-தாயுடன் நடந்து சென்றபோது பரிதாபம்


அ.பள்ளிப்பட்டி அருகே சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பலி-தாயுடன் நடந்து சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

சேலம்:

அ.பள்ளிப்பட்டி அருகே தாயுடன் நடந்து சென்றபோது சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

3 வயது குழந்தை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலபுரம் கள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 29). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியங்கா (25). இந்த தம்பதிக்கு கிரிஜா (6) என்ற மகளும், தளபதி என்கிற லக்ஷன் (3) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலை பிரியங்கா தனது குழந்தை லக்ஷனுடன் கோபாலபுரம்-அ.பள்ளிப்பட்டி சாலையில் நடந்து சென்றார். அங்குள்ள ரைஸ்மில் அருகே சென்றபோது, பின்னால் வேகமாக வந்த சரக்கு வாகனம் குழந்தை லக்ஷன் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட லக்ஷன் படுகாயம் அடைந்தான்.

சரக்கு வாகனம் மோதி பலி

அவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரியங்கா அனுமதித்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலத்தில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லக்ஷன் பரிதாபமாக இறந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்த அ.பள்ளிப்பட்டி போலீசார், குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவரை தேடி வருகிறார்கள்.

தாயுடன் நடந்த சென்றபோது சரக்கு வாகனம் மோதி 3 வயது குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story