மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 1 வயது பெண் குழந்தை பரிதாப சாவு-தந்தை, மகள்கள் படுகாயம்
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் தந்தை, 2 மகள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கரகதஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள் இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை செல்வம், துணி எடுப்பதற்காக தனது 3 மகள்களையும் அழைத்து கொண்டு பஞ்சப்பள்ளி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கரகதஅள்ளி பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பியபோது, எதிரே வந்த சரக்கு வாகனம், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் செல்வம் மற்றும் 3 மகள்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
குழந்தை பலி
அந்த வழியாக சென்றவர்கள் அவர்கள் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி செல்வத்தின் கடைசி மகளான 1 வயது குழந்தை சவுடேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தாள். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று, குழந்தை சவுடேஸ்வரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.