பிரசவத்தின்போது குழந்தை சாவு; பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது. பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.டாக்டர்கள் மீது கணவர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது. பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.டாக்டர்கள் மீது கணவர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குழந்தை சாவு
வில்லுக்குறி அருகில் உள்ள குதிரைப்பந்தி விளையைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது36). இவருடைய மனைவி சகாய சுபா (32). இவருடைய சொந்த ஊர் பணகுடி ஆகும். நிறைமாத கர்ப்பிணியான இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று பிரசவம் நடந்தது. இதில் குழந்தை இறந்து விட்டதாகவும், சகாய சுபா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேஷ், தவறான சிகிச்சையால்தான் குழந்தை இறந்து விட்டதாக புகார் தெரிவித்தார். இது ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகேஷ் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நான் கட்டிட வேலை செய்து வருகிறேன். எனது மனைவி சகாய சுபா பிரசவத்திற்காக அவரது சொந்த ஊரான பணகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 19-ந் தேதி மதியம் 2 மணிக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சுகபிரசவம் நடைபெறும் என கூறினார்கள். பின்னர் முடியாது எனக் கூறி ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இங்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சுமார் 4.30 மணியளவில் குழந்தை இறந்து விட்டது எனக் கூறிய டாக்டர்கள், சகாய சுபாவின் கர்ப்பப்பையை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். மருத்துவர்களின் கவன குறைவாலும், தவறான சிகிச்சையினாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இறந்த குழந்தையை நேற்று காலை 7 மணி அளவில் எனது கையில் தந்து கொண்டு செல்லும்படி கூறினார்கள். எனது மனைவி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறினார்கள். எனவே கவன குறைவாக செயல்பட்டும், தவறான மருத்துவ சிகிச்சை அளித்தும் தவறிழைத்த டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நீதி வழங்கிட கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.