கடமலைக்குண்டு அருகே குழந்தை சாவில் சந்தேகம்; புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுப்பு
கடமலைக்குண்டு அருகே குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சமூக நலத்துறை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
கடமலைக்குண்டு அருகே குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சமூக நலத்துறை அதிகாரி கொடுத்த புகாரின்பேரில், புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
2-வது பெண் குழந்தை
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தேவராஜ்நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. அவருடைய மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்தநிலையில் மீண்டும் கர்ப்பமான ரம்யா, கடந்த மாதம் 29-ந்தேதி கடமலைக்குண்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்ந்தார். அப்போது அங்கு அவருக்கு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மருத்துவமனையில் இருந்து ரம்யா, குழந்தையுடன் பாலூத்துவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
குழந்தை சாவில் சந்தேகம்
இதற்கிடையே பிரசவகால பின் கவனிப்புகள் பணிக்காக ரம்யாவின் வீட்டிற்கு அரசு மருத்துவமனை நர்சு ஒருவர் சென்றார். அப்போது அங்கு அவரது குழந்தை இல்லை.
இதுகுறித்து நர்சு கேட்டபோது, கடந்த 12-ந்தேதி குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறினார். மேலும் குழந்தையின் உடலை வீட்டின் அருகே உள்ள ஓடைப்பகுதியில் புதைத்ததாகவும் ரம்யா தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த நர்சு, இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளாதேவிக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சமூக நலத்துறை அதிகாரி, பாலூத்து கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை முடிவில் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் சியாமளாதேவி புகார் அளித்தார்.
உடல் தோண்டி எடுப்பு
இதையடுத்து குழந்தையின் சாவுக்கான காரணம் குறித்து அறிய உடலை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, இன்று ஆண்டிப்பட்டி தாசில்தார் சுந்தர்லால், கடமலைக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவக்குழுவினர் நேற்று பாலூத்து ஓடைப்பகுதியில் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்தனர்.
பின்னர் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது குழந்தையின் உடலில் எந்தவித காயங்களும் இல்லை. இதையடுத்து குழந்தையின் உடல் உறுப்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு, மதுரை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவுகள் வந்த பிறகு தான். குழந்தையின் சாவுக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.