குளத்தில் மூழ்கி 1½ வயது பெண் குழந்தை பலி
கோட்டூர் அருகே குளத்தில் மூழ்கி 1½ வயது பெண் குழந்தை பலியானது.
கோட்டூர் அருகே குளத்தில் மூழ்கி 1½ வயது பெண் குழந்தை பலியானது.
1½ வயது பெண் குழந்தை
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள நந்திமாங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி சியாமளாதேவி. இவர்களுக்கு மதுஷாலினி என்ற 1½ வயது பெண் குழந்தை இருந்தது.
நேற்று காலை ஸ்டாலின் வேலைக்கு சென்று இருந்தார். சியாமளாதேவி வீட்டில் சமைத்துக்கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் குழந்தை மதுஷாலினி வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை திடீரென காணாமல் போனது.
குளத்தில் மிதந்த நிலையில்...
இதனால் பதற்றம் அடைந்த சியாமளாதேவி அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சேர்ந்து குழந்தையை தேடினார். அப்போது வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குழந்தை மிதந்த நிலையில் கிடந்தது.
இதனால் பதறிப்போன அக்கம், பக்கத்தினர் உடனடியாக குழந்தையை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டதாக கூறினர்.
கிராம மக்கள் சோகம்
இதுகுறித்து கோட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், விக்கிரபாண்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளத்தில் மூழ்கி 1½ வயது குழந்தை பலியானது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.