சிமெண்டு காரை இடிந்து விழுந்து குழந்தை காயம்
புலிவலம் பகுதியில் தொகுப்பு வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு காரை இடிந்து விழுந்து குழந்தை காயம் அடைந்தது.
திருவாரூரை அடுத்த புலவலம் பகுதியில் மாரியம்மன் கோவில் தெருவில் தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்த கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் வீடுகள் சேதமடைந்து காணப்படுகிறது.இந்த தொகுப்பு வீட்டில் டிரைவரான மூர்த்தி என்பவர் தனது மனைவி சாந்தி, மகள்கள் அனுஸ்ரீ, உதித்தா, பூர்விகா(வயது3½) ஆகியோருடன் வசித்து வருகிறார்.நேற்று முன்தினம் மதியம் சாந்தி கடைக்கு சென்றிருந்தார். குழந்தை பூர்விகாவை அவரது பாட்டி பக்கிரியம்மாள் வைத்திருந்தார். மற்ற குழந்தைகள் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் மேற்கூரையின் சிமெண்டு காரைகள் திடீரென இடிந்து விழுந்தது. இதில் குழந்தை பூா்விகா காலில் காயம் ஏற்பட்டது. மற்ற குழந்தைகள் வெளியே விளையாடி கொண்டிருந்ததால் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. இதேபோல் முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒருவர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து காயம் அடைந்துள்ளார். இந்த தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு சேதமடைந்த தொகுப்பு வீடுகளை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.