வறுமையை ஒழிப்பதன் மூலம் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கலாம் - கலெக்டர் அனிஷ்சேகர் பேச்சு
வறுமையை ஒழிப்பதற்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முடியும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.
வறுமையை ஒழிப்பதற்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க முடியும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் தெரிவித்தார்.
வறுமையை ஒழித்தால்
சென்னை தொழிலாளர் கமிஷனர் அதுல் ஆனந்த் உத்தரவுப்படி, மதுரை கூடுதல் தொழிலாளர் கமிஷனர் குமரன் தலைமையில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் ஒழிப்பு முறை குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் மதுரையில் நேற்று நடந்தது. முகாமில் மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் வரவேற்றார். முகாமை மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த முகாமில், தமிழகத்தில் வருகிற 2025-ம் ஆண்டுக்குள் அனைத்து பணிகளிலும் குழந்தை தொழிலாளர் இல்லாத மற்றும் அபாயகரமான தொழிலில் வளரிளம் பருவ தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற செயல்திட்டத்துக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது பேசிய கலெக்டர், மதுரை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில பகுதிகளில் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதை குறைக்க இந்த பயிற்சி முகாம் உதவியாக இருக்கும். வறுமை தான் குழந்தை தொழிலாளர் முறைக்கு காரணமாக உள்ளது. எனவே குழந்தை தொழிலாளர் ஒழிப்பு அமலாக்கத்துடன் வாழ்வாதாரத்தை உயர்த்தி வறுமையை போக்க சமூக பாதுகாப்பு உதவிகளை செய்ய வேண்டும். உலக அளவில் இளைஞர் சக்தி அதிகளவு உள்ள நாடு இந்தியா. அடிப்படை கல்வியுடன் திறன் மேம்பாட்டு பயிற்சிகள், உயர்கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்றார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
அதனை தொடர்ந்து, மதுரை கூடுதல் கமிஷனர் மீட்கப்பட்ட குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களுக்கு தொடர்புடைய துறைகள் இணைந்து எடுக்க வேண்டிய மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். அந்த நடவடிக்கைகளில் வழக்கு தொடரும் போது, ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய நடைமுறைகள், சிக்கல்கள் குறித்து மதுரை கூடுதல் முதன்மை நீதிமன்ற உதவி அரசு வக்கீல் காளீஸ்வரி விளக்கமளித்தார்.
சிவகங்கை தொழிலாளர் உதவி கமிஷனர் ராஜ்குமார், குழந்தை தொழிலாளர்கள், வளரிளம் தொழிலாளர்களை மீட்க, மறுவாழ்வு அளிக்க பல்வேறு துறைகள் இணைந்து எவ்வாறு செயல்படுவது என்றும், இந்த முறையை ஒழிக்க தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள மாநில செயல்திட்டம் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து தொழிலாளர் இணை கமிஷனர் சுப்பிரமணியன் விளக்கமளித்தார். பின்னர், பல்துறை அலுவலர்களின் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.
உறுதிமொழி
முகாமில் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவத்தொழிலாளர் முறைப்படுத்துதல், ஒழித்தல் சட்டம்-1986-ன் படி, இந்த பணியை செயல்படுத்துவது தொடர்புடைய துறைகளான தொழிலாளர் துறை, தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், வருவாய்த்துறை, காவல்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக நலத்துறை ஆகியவற்றை சேர்ந்த அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை மதுரை உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி ஒருங்கிணைத்தார்.