தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை தகவல் ஒலிபரப்பு அமைச்சக கருத்தரங்கில் கலெக்டர் சாந்தி பேச்சு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தர்மபுரியில் நடந்த தகவல் ஒலிபரப்பு அமைச்சக பயிலரங்கில் கலெக்டர் சாந்தி பேசினார்.
தீவிர நடவடிக்கை
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊரக ஊடகவியலாளர் பயிலரங்கம் தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. பயிலரங்கை கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மத்திய மாநில அரசுகள் பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தர்மபுரி மாவட்டம் விவசாயத்தை பெரிதும் நம்பியுள்ள மாவட்டம் ஆகும். இங்கு வேளாண்மை சார்ந்த திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தர்மபுரி வளரும் மாவட்டமாக இருந்தாலும், பெண் சிசுக்கொலை, குழந்தை திருமணம், அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக் கொள்வது போன்ற பிரச்சினைகள் இங்கு உள்ளன. இவற்றை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.
முக்கிய பங்கு
நிகழ்ச்சியில் பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசுகையில், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார்.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜான்சிராணி, வேளாண்மை இணை இயக்குனர் விஜயா ஆகியோர் சமூக நலத்துறை மற்றும் வேளாண்மை துறை ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
அக்னி பாதை, பாதுகாப்புத்துறை தொழில் வழித்தடம் குறித்து பாதுகாப்பு அமைச்சக மக்கள் தொடர்பு அலுவலர் பொன்னியின் செல்வன் விளக்கி பேசினார். இதில் மத்திய மக்கள் தொடர்பு புதுச்சேரி துணை இயக்குனர் சிவக்குமார், தர்மபுரி களவிளம்பர அலுவலர் பிபின் உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.