அரூர் அருகே சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது-கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
அரூர்:
அரூர் அருகே குழந்தை திருமணம் செய்து வைக்கப்பட்ட சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
குழந்தை திருமணம்
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2021-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் சிறுமிக்கு திருமணம் செய்ய அவருடைய தந்தை முடிவு செய்தார். அப்போது திருமணம் செய்து கொள்ள சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் சிறுமியை கட்டாயப்படுத்தி எச்.புதுப்பட்டியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு குழந்தை திருமணம் செய்து வைத்தனர். அதன்பின் சிறுமி கலைஞனுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதற்கிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வாலிபர், சிறுமியை பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
போக்சோ வழக்கு
அப்போது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரோஜா, சிறுமி மற்றும் குடும்பத்தினரிடம் நேரில் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் சிறுமியின் தந்தை, மாமியார் ஆகியோர் மீதும் குழந்தை திருமண தடை சட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.