குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம்
குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதி:
பொன்னமராவதியில் 1098 சைல்டு லைன் சார்பில் தாலுகா அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு தாசில்தார் பிரகாஷ் தலைமை தாங்கினார். குழந்தைகள் நல குழுத்தலைவர் சதாசிவம், தனி தாசில்தார் சேகர், சமூக நலத்துறை தாசில்தார் பழனிச்சாமி, பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ. சைல்டு லைன் துணை மைய இயக்குனர் குழந்தைவேலு வரவேற்றார். இதில் குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தை திருமணம் நிறுத்தம் உள்ளிட்டவைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் திருமணச்சான்று வழங்கும் முன் மணமகன், மணமகளின் வயதுச்சான்றிதழை சரிபார்த்து வழங்க வேண்டும். சமீபகாலமாக அதிக அளவிலான குழந்தை திருமணங்கள் செய்ய முயற்சிக்கப்படுகிறது என்றும் இதுபோன்ற சமயங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் உதவியாளர் மூலம் சைல்டு லைன் களப்பணியாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும். திருமண மண்டபம், பஸ் நிலையம், வட்டார வள மையம், பள்ளி வளாகம், கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1098 சைல்டு லைன் விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகப் பணியாளர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பூங்கொடி நன்றி கூறினார்.