கோத்தகிரி அருகே குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கோத்தகிரி அருகே குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குஞ்சப்பனை ஊராட்சி சார்பில் கொட்டகம்பையில் உள்ள ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் தலைமை வகித்தார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் ரம்யா மற்றும் ஊராட்சி செயலர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். அப்போது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பது குறித்தும், குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும், பொது இடங்களில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் குற்றங்கள் சம்பந்தமாக ஏற்படும் தொல்லைகள், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகளுக்கு படிப்பை மீண்டும் தொடர செய்வது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிடும் நிலையில் குழந்தைகள் தனியாக இருப்பதை கண்காணித்து அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது, பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து விளக்கிப் பேசினர். மேலும் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்பட கல்வித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துக் கொண்டனர்.