ரூ.50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்பனை


ரூ.50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்பனை
x

ராமநாதபுரத்தில் ஒரு வயது பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததை அறிந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் ஒரு வயது பெண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததை அறிந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.

மாற்றுத்திறனாளி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மகிண்டி பகுதியை சேர்ந்தவர் வாலிபர் ராமர். மாற்றுத் திறனாளியான இவருக்கும் காரியாபட்டி பகுதியை சேர்ந்த யோகா என்ற 19 வயது பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்கள் 2 பேரும் மகிண்டி பகுதியில் வசித்து வந்த நிலையில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுஉள்ளது.

இந்தநிலையில் கணவருடன் கோபித்துக்கொண்டு இளம் பெண் குழந்தையுடன் ராமநாதபுரம் பாரதி நகர் பகுதியில் உள்ள உறவினர் கார்த்திக் வீட்டிற்கு வந்து விட்டாராம். மனைவி பிரிந்து சென்றதால் ராமர் திருப்பூருக்கு சென்று விட்டாராம்.

இந்தநிலையில் ராமநாதபுரம் பாரதி நகரில் தஞ்சம் அடைந்த நிலையில் அந்த பெண்ணையும் தனது மனைவியையும் கார்த்திக் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்துவிட்டாராம். இதனை தொடர்ந்து அந்த பச்சிளம் குழந்தையை பார்த்துக்கொள்வதாக கூறிய கார்த்திக் ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் உள்ள ஞானம் என்ற பெண்ணிடம் ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த குழந்தையின் தந்தை ராமர் மற்றும் அவரின் தாய் கிருஷ்ணவேணி ஆகியோர் ராமநாதபுரம் அரண்மனைக்கு வந்து குழந்தையை தரும்படி கேட்டு உள்ளனர். அவர் தர மறுத்துவிட்டாராம். இதை அறிந்த கார்த்திக் நேற்றுமுன்தினம் சென்று அந்த குழந்தையை வாங்கி கொண்டு வந்துவிட்டாராம்.

விசாரணை

குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி ஆகியோர் ராமநாதபுரம் குழந்தைகள் நலக்குழுமத்தில் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் நேற்று குழந்தைகள் நலக்குழு தலைவர் காயத்ரி தலைமையில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் பெண் குழந்தை தந்தையிடம் இருப்பதுதான் சரி என்ற முடிவுக்கு வந்த அதிகாரிகள் குழந்தையை மீட்டு தந்தை ராமரிடம் அனுப்பிவைத்தனர்.

இந்த சம்பவத்தில் கார்த்திக் குழந்தையை விற்பனை செய்தாரா அல்லது குழந்தையின் தாயே வெளிநாடு செல்லும் முன் குழந்தையை விற்பனை செய்துவிட்டு அந்த பணத்தில் வெளிநாடு சென்றாரா என்பது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ராம நாதபுரத்தில் ரூ.50 ஆயிரத்திற்கு பெண் குழந்தை விற்பனை செய்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story