குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம்
கொடைக்கானல் அருகே பூம்பாறையில் குழந்தை வேலப்பர் கோவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
தேரோட்டம்
கொடைக்கானல் அருகே பூம்பாறையில் பழமையான குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. பழனி முருகன் கோவிலின் உப கோவிலான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தேரோட்ட திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தேரோட்ட திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதிஉலா வந்தார்.
இந்தநிலையில் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் குழந்தை வேலப்பர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார். பின்னர் தேருக்கு முன்பு தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து திருவிழாவில் கலந்துகொண்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடிய படி நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. பின்னர் கோவிலுக்கு வந்த தேர் நிலையை அடைந்தது.
பக்தர்கள் நேர்த்திக்கடன்
அதன்பிறகு பக்தர்கள் ரத வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். அத்துடன் ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தமிழகத்திலேயே மலைப்பகுதியில் தேரோட்டம் நடைபெறும் முக்கிய இடங்களில் பூம்பாறையும் ஒன்று.
இதனால் நேற்று நடந்த தேரோட்ட திருவிழாவில் திண்டுக்கல் மட்டுமின்றி மதுரை, தேனி, சிவகங்கை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டனர். தேரோட்டத்தையொட்டி பூம்பாறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் இரவில் சுவாமி பூத்தேரில் எழுந்தருளி வீதிஉலா வந்தார். திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு மற்றும் திருக்கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் அதிகாரிகள், பூம்பாறை கிராம மக்கள் செய்திருந்தனர்.