குழந்தைகளுக்கு காலை உணவு சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது; கலெக்டர் பேட்டி
வேலூர் மாநகராட்சி பகுதியில் குழந்தைகளுக்கு காலை உணவு சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது என்று ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் குழந்தைகளுக்கு காலை உணவு சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது என்று ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறினார்.
சமையல் கூடத்தில் ஆய்வு
வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 48 தொடக்கப்பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சிற்றுண்டி தயாரிக்க வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நவீன வசதிகளுடன் சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் சிற்றுண்டி வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சமையல் கூடத்தில் தயாரிக்கப்படும் சிற்றுண்டியை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா ஆகியோருடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர், அங்கு உணவு தயாரிக்கும் பொருட்கள் சுத்தமாக உள்ளதா?, சுகாதாரமான முறையில் சிற்றுண்டி தயார் செய்யப்படுகிறதா என்று பார்வையிட்டார்.
சிறப்பான முறையில்...
தொடர்ந்து சித்தேரி அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி, வேலப்பாடி மாநகராட்சி தொடக்கப்பள்ளி, சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே உள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளி, காட்பாடி காந்திநகர் அரசு தொடக்கப்பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுவதை கலெக்டர், எம்.எல்.ஏ., மேயர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டியை பரிமாறி, பின்னர் அதனை சாப்பிட்டனர்.
ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கூறுகையில், 'வேலூர் மாநகராட்சி பகுதியில் குழந்தைகளுக்கு காலை உணவு சிறப்பான முறையில் வழங்கப்படுகிறது. 48 பள்ளிகளில் படித்து வரும் 3,250 குழந்தைகள் காலை சிற்றுண்டி சாப்பிடுகிறார்கள். சுகாதாரமான முறையில் தரமாக உணவு தயாரிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை சாப்பிடும் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். சமையல் பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு வருகிறார்கள். இதில், ஏதாவது குறைபாடுகள் இருந்தால் களையப்படும்' என்றார்.
ஆய்வின்போது வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், மாநகர நல அலுவலர் கணேசன், தாசில்தார் செந்தில், சுகாதார அலுவலர்கள் லூர்துசாமி, முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.