பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
சுரண்டை அருகே பள்ளிக்கூடத்துக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுரண்டை:
சுரண்டை அருகே அச்சங்குன்றம் கிராமத்தில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தை இடித்து அகற்றி விட்டு வேறு இடத்தில் புதிதாக கட்டினர். தொடர்ந்து பள்ளிக்கூடம் முன்பு செயல்பட்ட இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் அச்சங்குன்றம் கிராமத்தில் அரசு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் நேற்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்குள்ள கோவில் வளாகத்தில் கிராம மக்கள் திரண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அச்சங்குன்றம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வரவழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட கல்வி அலுவலர் அலாய்சியஸ், வீரகேரளம்புதூர் தாசில்தார் தெய்வசுந்தரி, ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு சகாயஜோஸ், சுரண்டை இன்ஸ்பெக்டர் சுதந்திராதேவி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது ஆண்டு இறுதித்தேர்வு நடைபெற உள்ளதால் மாணவர்களை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புமாறு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் அரசு பள்ளிக்கூடம் அமைப்பதை உறுதி செய்யும் வரையிலும் போராட்டத்தை தொடர்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.