குழந்தைகள் உதவி மைய ஆலோசனை கூட்டம்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் குழந்தைகள் உதவி மைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் குழந்தைகள் உதவி மையம் இயங்கி வருகிறது. இந்த குழந்தைகள் உதவி மையம் சார்பில் ரெயில்களில் பயணிக்கும் போது குழந்தைகள் தவறி நின்று விடுதல், வீட்டில் கோபித்துக் கொண்டு ரெயில் நிலையம் வரும் சிறுவர்கள், கை குழந்தைகளுடன் ரெயில்களில் உதவி தேடுதல் போன்றவர்களை மீட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி 3 மாத குழந்தைகள் முதல் 17 வயது வரை உள்ள சிறுவர்களை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் குழந்தைகள் உதவி மைய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், ரெயில் நிலைய மேலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் பாதுகாப்பு உதவி அலுவலர் பிரசாந்த் வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் பேசும்போது இந்த ஒரு வருடத்தில் மட்டும் 250 குழந்தைகள் ரெயில் நிலையத்தில் மீட்டு பெற்றோரிடமும், காப்பகத்திலும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.