தாய்-தந்தையின் அகம்பாவத்தால் குழந்தைகளின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்படுகிறது -ஐகோர்ட்டு வேதனை
தாய், தந்தையிடம் உள்ள அகம்பாவச் செயல்களால், குழந்தைகளின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டு வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை,
மனைவியின் கட்டுப்பாட்டில் உள்ள இரட்டைக் குழந்தைகளை மீட்டுத்தரக்கோரி அமெரிக்க வாழ் இந்தியர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், "தானும், தனது மனைவியும் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தற்போது அமெரிக்க குடிமக்கள் என்பதால் பிறப்பால் தனது இரு குழந்தைகளும் அமெரிக்க குடிமக்கள்.
கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது குழந்தைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்த மனைவி, அவர்களை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து வரவில்லை. எனவே தனது குழந்தைகளை மனைவியிடமிருந்து மீட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அகம்பாவம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
குழந்தை பருவம்தான் ஒரு மனிதனின் குணநலன்களை உருவாக்கும் முக்கிய காரணியாகும், அதனால், குழந்தை பருவத்தில் மகிழ்ச்சியாக வாழவேண்டும். ஆனால், தாய், தந்தையிடம் உள்ள அகம்பாவச் செயல்களால், அவர்கள் போடும் சண்டைக்கு, குழந்தைகள் சாட்சியாக இருந்து வருவதும், பெரும்பாலான சண்டையில் குழந்தைகளின் வாழ்வு அடகு வைக்கப்படுவதும் வேதனைக்குரியதாகும். பெற்றோரின் செயல்களால் குழந்தைகளின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும் குழந்தை எப்படி நல்லதொரு மனிதனாக நட்புறவுடன் எதிர்காலத்தில் வாழ்வார்கள்? என்பது பல மில்லியன் கேள்வியாகும்.
இரவில் வகுப்பு
பெற்றோரின் அகம்பாவச் செயல்களால் பாதிக்கப்படும் குழந்தைகள் தொடர்பான வழக்குகள் தினமும் எங்கள் முன்பு விசாரணைக்கு வருகிறது. 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாத்தா பாட்டியை பார்க்க இந்தியா வந்து, பெற்றோரிடையே ஏற்பட்ட தகராறினால், இங்கேயே மனுதாரரின் இரு குழந்தைகளும் தங்கி விட்டனர்.
ஆனால், அவர்கள் இருவரும் அமெரிக்க பள்ளிக்கூடம் நடத்தும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படித்து வருகின்றனர். அதாவது, இந்திய நேரப்படி நள்ளிரவு வகுப்புகள் நடக்கின்றன.
ஆன்லைன் வகுப்பினால், சக மாணவர்களுடன் பழகும் வாய்ப்பு இவர்களுக்கு இல்லை. எனவே, குழந்தைகள் நலன் கருதி, சுப்ரீம் கோர்ட்டு இதுதொடர்பான வழக்குகளில் பிறப்பித்துள்ள தீர்ப்புகளின்படி, முடிவு எடுக்க வேண்டியதுள்ளது.
ஒப்படைக்க வேண்டும்
அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இந்த குழந்தைகள், அங்குள்ள வாழ்க்கை முறைப்படிதான் வளர வேண்டும். அமெரிக்க கோர்ட்டும், குழந்தைகள் தந்தையின் கட்டுப்பாட்டில் வளர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
எனவே, குழந்தைகளின் எதிர்காலம், கல்வி மற்றும் வாழ்க்கை முறைகளை கருத்தில் கொண்டு அந்த குழந்தைகளை 6 வார காலத்துக்குள் தந்தையிடம் தாயார் ஒப்படைக்க வேண்டும். குழந்தைகள் தொடர்பாக வேறு ஏதேனும் நிவாரணம் வேண்டும் என்றால், அமெரிக்க கோர்ட்டை தாயார் அணுகலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.