மிளகாய் விவசாயம் அமோகம்
மிளகாய் விவசாயம் அமோகமாக நடந்து வருகிறது.
ராமநாதபுரம் நகரை சுற்றிய பகுதிகளின் விவசாய தேவையையும், தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்யும் ஒரே நீர் ஆதாரம் பெரிய கண்மாய். பருவமழை நன்றாக பெய்யும் சமயங்களிலும், வைகை தண்ணீர் கடைசிவரை வந்து சேரும் தருணங்களிலும்தான் இந்த பெரிய கண்மாய் நிறைந்து விவசாயம் செழித்து வருகிறது. பெரும்பாலான காலங்களில் இந்த கண்மாயில் தண்ணீர் தேக்க வழியில்லை, பாதுகாப்பில்லை என்ற காரணங்களை கூறி தண்ணீரை கடலில் கலந்துவிட செய்வதுதான் நிலவி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யாத நிலையிலும் வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் மற்றும் ராமநாதபுரம் கணக்கில் உள்ள நீர் அனைத்தும் தேக்க வழியில்லாமல் கடலில் கலந்து வீணாகியது. இருப்பினும் கண்மாயில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்தி 3 ஆயிரம் ஏக்கரில் நெல்விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கண்மாயில் தண்ணீர் இன்னும் இருப்பதால் பெரிய கண்மாயை சுற்றி உள்ள பகுதிகளில் மிளகாய் விவசாயம் நன்றாக உள்ளது. காருகுடி உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் பெரிய கண்மாய் நீர் தங்களுக்கு கைகொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பெரிய கண்மாயை சுற்றி உள்ள பகுதிகளில் நெல், மிளகாய், பருத்தி உள்ளிட்டவைகளும், காய்கறி வகைகளும் விவசாயிகளுக்கு பயன் அளித்துள்ளது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் மழையின்றி நெல் உள்ளிட்ட அனைத்து விவசாயமும் அழிந்து போன நிலையில் வைகை தண்ணீர் வரத்தால் ராமநாதபுரம் பெரிய கண்மாயில் தண்ணீர் தேக்கி வைத்து சுற்றி உள்ள பகுதி விவசாயத்திற்கு பயன் உள்ளதாக அமைந்துள்ளது.