ராமநாதபுரம் குண்டு மிளகாய் ஏற்றுமதி அதிகரிப்பு
ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதன் எதிரொலியாக குண்டு மிளகாய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதன் எதிரொலியாக குண்டு மிளகாய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
குண்டு மிளகாய்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல்விவசாயம் கைவிட்டாலும் விவசாயிகளுக்கு கைகொடுக்கும் ஒரே பணப்பயிர் மிளகாய்தான். குறிப்பாக மாவட்டத்தில் மட்டும் விளையும் குண்டு மிளகாய்க்கு அதன் தரம், காரம், சுவை என அனைத்திற்கும் தனி மவுசு உண்டு. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் வெளிநாடுகளிலும் குண்டு மிளகாய் என்று அழைக்கப்படும் முண்டுவுக்கு தனி கிராக்கி எப்போதும் உண்டு. மாவட்டத்தில் 20 ஆயிரம் எக்டருக்கு மேல் குண்டு மிளகாய் பயிரிடப்படுகிறது.
இந்த மிளகாய் மூலம் மிளகாய் தூள், மிளகாய் ஊறுகாய், மிளகாய் பேஸ்ட் போன்றவை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ, மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு நாடுகள் போன்றவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. உலகளவில் குண்டு மிளகாய் அதிக பிரசித்தி பெற்றது என்றால் அது மிகையாகாது.
ஏற்றுமதி
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் விளையும் இந்த குண்டு மிளகாய்க்கு சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன்காரணமாக மாவட்ட குண்டு மிளகாய்க்கு அதிகளவிலான ஏற்றுமதி வாய்ப்பு உருவாகி உள்ளது. இங்கிருந்து ஏற்கனவே வெளிநாடுகளுக்கு குண்டு மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் உலக அரங்கில் ஏற்றுமதியாளர்களிடையே ராமநாதபுரம் குண்டு மிளகாய் தனி கவனம் பெற்றுள்ளது.
இதனை பயன்படுத்தி மாவட்டத்தை சேர்ந்த மிளகாய் வியாபாரிகள் குண்டு மிளகாய் ஏற்றுமதி தொழிலில் தனிக்கவனம் செலுத்தி வருகின்றனர். மிளகாய் ஏற்றுமதியாளர்கள் குண்டு மிளகாய்களில் உள்ள காம்புகளை அகற்றி தரமிக்க வகையில் அட்டைப் பெட்டிகளில் அடைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். புவிசார் குறியீடு பெற்றுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்ட குண்டு மிளகாய்க்கு மேலும் மவுசு கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.