மிளகாய் விளைச்சல் கடும் பாதிப்பு
நயினார்கோவில் அருகே இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் கடும் பாதிப்படைந்துள்ளது. விலையும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நயினார்கோவில்,
நயினார்கோவில் அருகே இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் கடும் பாதிப்படைந்துள்ளது. விலையும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மிளகாய் விளைச்சல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட பருத்தி, மிளகாய் விவசாயத்தில்தான் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, ஆர்.எஸ் மங்கலம், நயினார் கோவில் பகுதிகளில் மிளகாய் விவசாயத்தில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நயினார் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் மிளகாய் விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி நயினார் கோவில், பாண்டியூர், காரடர்ந்த குடி, வாணியவல்லம், தாழையடிகோட்டை, கரைமேல் குடியிருப்பு, நகரமங்கலம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் அதிக அளவில் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிளகாய் விளைச்சல் குறைந்துள்ளதாகவும், எதிர்பார்த்த அளவு விலை இல்லாததாலும் விவசாயிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
விலை குறைவு
இதுகுறித்து வாணியவல்லம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோபால் கூறியதாவது:- போதிய மழை இல்லாததால் தண்ணீர் இல்லாமலும், சரியான விளைச்சல் இல்லாமலும் மிளகாய் விளைச்சல் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 1 கிலோ ரூ.300 வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ.180-ல் இருந்து ரூ.200 வரை மட்டுமே போகிறது.
நயினார் கோவிலை சுற்றி உள்ள பெரும்பாலான கண்மாய்களுக்கு வைகை தண்ணீர் வரும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் வைகை தண்ணீர் கொண்டு வரப்படவில்லை. பாதைகளை தூர்வாரி வைகை தண்ணீர் கண்மாய்களுக்கும், நீர் நிலைகளுக்கும் கொண்டு வந்தால் விவசாயத்திற்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். இனி வரும் ஆண்டாவது தண்ணீர் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.