மழை பெய்யாததால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு


மழை பெய்யாததால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாயல்குடி அருகே மழை பெய்யாததால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளன என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே மழை பெய்யாததால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளன என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மிளகாய் சாகுபடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயத்தை விட மிளகாய், பருத்தி, கொத்தமல்லி உள்ளிட்ட விவசாய பணிகளில் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சாயல்குடி அருகே ஆயக்குடி, கொத்தங்குளம், சிக்கல், இதம்பாடல், திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது சாயல்குடி அருகே ஆயக்குடி, கொத்தங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் செடிகளில் காய்த்து குலுங்கும் குண்டு மிளகாய்களை பறிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.

விளைச்சல் பாதிப்பு

இது குறித்து ஆயக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயி காஜா முகைதீன் கூறியதாவது:-

கொத்தங்குளம், ஆயக்குடி, சிக்கல், இதம்பாடல், காவாக்குளம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மிளகாய் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஆனால் இந்த ஆண்டு தற்போது மிளகாய் சீசன் தொடங்கியும் மழையே பெய்யாததால் தண்ணீர் இல்லாமல் பல கிராமங்களிலும் மிளகாய் விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டு விட்டது. 3 ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்து இருந்தேன். 2 ஏக்கர் மிளகாய் செடிகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து போய்விட்டன.

மிளகாய் பறிக்கும் பணி தீவிரம்

தற்போது ஒரு ஏக்கரில் தூவப்பட்ட மிளகாய் செடிகள் வளர்வதற்காக ரூ.15 ஆயிரம் செலவு செய்து கிணறு வெட்டி அதிலிருந்து மிளகாய் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றேன். தற்போது தான் இந்த செடிகளில் மிளகாய் காய்க்க தொடங்கியுள்ளன. அதனால் செடிகளில் காய்த்துள்ள குண்டு மிளகாய்களை பறித்து வருகின்றேன். கடந்த ஆண்டு 10 கிலோ குண்டு மிளகாய் ரூ.2500 வரை விலை போனதுடன் ஓரளவு விளைச்சலும் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மழையே இல்லாததால் மிளகாய் விளைச்சல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை மிளகாய் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மழை இல்லாமல் நெல் விவசாயம் ஒருபுறம் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மிகுந்த வேதனையும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.


Next Story