போதிய மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு


போதிய மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் பாதிப்பு
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூர் பகுதியில் போதிய மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் போதிய விலையும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் பகுதியில் போதிய மழை இல்லாததால் மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் போதிய விலையும் இல்லாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மிளகாய் விவசாயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் நெல் விவசாயத்தை விட மிளகாய் விவசாயத்தில் அதிகமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் மிளகாய் விவசாயத்திற்கான விதைகளை விதைக்கும் பணி புரட்டாசி மாதம் தொடங்கும். இவ்வாறு புரட்டாசி மாதம் விதைக்கப்படும் விதைகளானது 4 மாதத்திற்குள் நன்கு செடியாக வளர்ந்து செடிகளில் மிளகாயும் காய்க்க தொடங்கி விடும்.

இந்த நிலையில் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பூசேரி, மட்டியாரேந்தல், கடம்போடை, செங்கற்படை, வளநாடு, கருங்குடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் மிளகாய் விவசாயத்தில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது செடிகளில் மிளகாய் காய்க்க தொடங்கி விட்டதால் செடிகளில் இருந்து குண்டு மிளகாய் மற்றும் குச்சி மிளகாய்களை பறித்து காய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகள் ஏமாற்றம்

இது குறித்து மட்டியாரேந்தல் கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி குழந்தை தெரசாள் கூறியதாவது:- 50 ஆண்டுகளாக மிளகாய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறேன். இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் மிளகாய் விளைச்சலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஓரளவு மழை பெய்திருந்தால் செடிகளும் நன்றாக வளர்ந்து, மிளகாய்களும் நன்கு காய்க்க தொடங்கி இருக்கும். சரியாக மழை இல்லாததால் செடிகளில் போதிய மிளகாய் காய்க்கவில்லை.

கடந்த ஆண்டு 10 கிலோ மிளகாய் ரூ.1400 வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ1200-க்கு மட்டுமே விலை போகிறது. விலையும் குறைந்துள்ளது.

விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதோடு விலையும் குறைந்துள்ளது.இது மிளகாய் விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story