பூச்சி தாக்குதலால் நிறம் மாறிய மிளகாய்கள்
முதுகுளத்தூர் அருகே பூச்சி தாக்குதலால் மிளகாய்கள் நிறம் மாறின.
முதுகுளத்தூர் அருகே பூச்சி தாக்குதலால் மிளகாய்கள் நிறம் மாறின.
மிளகாய் சாகுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட விவசாய பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.. அதுபோல் மாவட்டத்திலேயே நெல் விவசாயத்தை விட மிளகாய் விவசாயம் தான் அதிகமாக நடைபெற்று வருகின்றது.
முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பூசேரி, கருமல், மட்டியாரேந்தல், தாழியாரேந்தல், திருவரங்கம், மிக்கேல் பட்டினம், மல்லல் உள்ளிட்ட 50-க்கும் அதிகமான கிராமங்களில் மிளகாய் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனிடையே இந்த ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய அதிகமான கிராமங்களில் மிளகாய் விளைச்சல் பூச்சி தாக்குதலால் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது.
பூச்சி தாக்குதல்
இது குறித்து பூசேரி கிராமத்தை சேர்ந்த மிளகாய் விவசாயி சாந்தகுமார் கூறியதாவது:-
இந்த ஆண்டு பருவமழை சரிவர பெய்யவில்லை. பருவமழையும் பெய்யாததால் மிளகாய் செடிகள் தண்ணீர் இன்றி வறண்டு போய்விட்டன. அதிலும் இந்த ஆண்டு பூச்சி தாக்குதல் அதிகமாகவே உள்ளது. இதனால் செடிகளில் காய்ந்துள்ள மிளகாய்கள் பழுத்து மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன. இந்த ஆண்டு பூச்சி தாக்குதலினால் மிளகாய் மகசூல் பாதி்க்கப்பட்டு உள்ளது.
அது போல் கடந்தாண்டு மிளகாய் மகசூல் நன்றாக இருந்ததுடன் 10 கிலோ மிளகாய் வத்தல் ரூ.3 ஆயிரம் வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு மிளகாய் மகசூலும் குறைந்ததோடு மட்டுமல்லாமல் 10 கிலோ மிளகாய் வத்தல் ரூ.1800 வரை மட்டுமே விலை போகின்றது. மிளகாய் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான விவசாயிகள் இந்த ஆண்டு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.