சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தைகிராம மக்கள் முற்றுகை
மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் எதிரொலியாக, சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ஆசிரியை ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மாணவிகள் தற்கொலை முயற்சி
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில், அரசு உதவி பெறும் தனியார் மகளிர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது பள்ளியின் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து 9-ம் வகுப்பு மாணவிகள் 2 பேர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களுக்கு, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலைக்கு முயன்ற 2 மாணவிகளும், சின்னாளப்பட்டி அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள், தினமும் பள்ளிக்கு சொந்தமான பஸ்சில் வந்து சென்றனர்.
அந்த பஸ்சின் இருக்கையில் இந்த மாணவிகள் உட்காருவதற்கு ஆசிரியைகள் சிலர் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்ததாகவும், மேலும் அவர்களை சாதியை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் தான் மாணவிகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மாணவிகளின் உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
பஸ் சிறைப்பிடிப்பு
இந்தநிலையில் நேற்று காலை மாணவிகளை ஏற்றி செல்வதற்காக, அந்த பள்ளி பஸ் தொப்பம்பட்டிக்கு வந்தது. இதனைக்கண்ட மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் அந்த பஸ்சை சிறைப்பிடித்தனர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பாத்துரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, 2 மணி நேரத்துக்கு பிறகு பஸ்சை விடுவித்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதற்கிடையே தொப்பம்பட்டி கிராம மக்கள், சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், மாணவிகள் பினாயில் குடிக்க காரணமான ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை சூப்பிரண்டுகள் இம்மானுவேல் ராஜ்குமார், உதயகுமார், ராஜமுரளி ஆகியோர் சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு விரைந்தனர்.
முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த அவர்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போலீசில் புகார்
இந்தநிலையில் தற்கொலைக்கு முயன்ற மாணவி ஒருவர் தரப்பில் அவரது தாயார் சின்னாளப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், என்னுடைய மகளை சாதிய வன்மத்தோடு பிற மாணவிகள் முன்பு சாதி பெயரை சொல்லி சில ஆசிரியைகள் திட்டுகின்றனர். பள்ளி வாகனத்தில், உட்கார இடம் கொடுக்காமல் நின்று கொண்டே பள்ளிக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் மனம் உடைந்த எனது மகளும், எங்கள் கிராமத்தை சேர்ந்த மற்றொரு மாணவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். எனவே அந்த ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிகாரிகள் விசாரணை
இந்தநிலையில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர் பாண்டித்துரை, ஆத்தூர் தாசில்தார் சரவணன், திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், நன்னடத்தை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் வந்தனர்.
பின்னர் பள்ளி ஆசிரியைகள், மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனிடையே இந்த விவகாரம் எதிரொலியாக, பள்ளியின் கணித ஆசிரியை பிரேமலதாவை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இதேபோல் மற்றொரு ஆசிரியைக்கு மருத்துவ விடுப்பு அளித்திருப்பதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.