திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை தேரோட்டம்


திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை தேரோட்டம்
x

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

தஞ்சாவூர்

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சித்திரை திருவிழா

தஞ்சை மாவட்டம் திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 7-ந்தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி கடந்த 29-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது. அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அப்போது ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் வீதி உலா வந்தது. தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான்சுவாமிகள் முன்னிலையில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலையடி வந்தவுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவையாறு துணை போலீ்ஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.

சப்தஸ்தான பெருவிழா

விழாவில் வருகிற 6-ந்தேதி சப்தஸ்தான பெருவிழா நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, சென்று அன்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமிக்கிறது. இரவு தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெறுகிறது.

பொம்மை பூபோடும் நிகழ்ச்சி

மே 7-ந்தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பொம்மை பூ போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்ததும் அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும். விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுர ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாச்சாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


Next Story