அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா


அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா
x

கிருஷ்ணராயபுரம், தோகைமலையில் உள்ள அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீ மிதித்து, அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரூர்

தீ மிதி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் உள்ள மலையாள பகவதி அம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீ மிதித்து தேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து இன்று (புதன்கிழமை) முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) எருமைகிடா வெட்டும் நிகழ்ச்சியும், மலையாள சாமி குட்டி குடிக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. வருகிற 28-ந் தேதி கரகம் ஆற்றுக்கு எடுத்துச்செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா முடிவடைகிறது.

சித்திரை திருவிழா

இதேபோல் தோகைமலை அருகே உள்ள கொசூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொசூரில் கிராம பொதுமக்களுக்கு பாத்தியப்பட்ட விநாயகர், குள்ளாயி அம்மன் மற்றும் பாம்பலம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவில்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இதையடுத்து கொசூர் கிராம மக்கள் விரதம் இருந்து குள்ளாயி அம்மன் மற்றும் பாம்பலம்மன் சாமிகளை வழிபட்டு வந்தனர். தொடர்ந்து முதல் நாள் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இதில் கொசூர் கிராம ஊர் முக்கியஸ்தர்கள், நாட்டாமைகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கோவில் கிணற்றில் குள்ளாயி அம்மனுக்கு கரகம் பாலித்தல் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து குள்ளாயி அம்மன் கரகம் சிறப்பு அலங்காரத்தில் தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் வீதிஉலா வந்து கோவிலில் குடிபுகுந்தது.

நேர்த்திக்கடன்

2-ம் நாள் திருவிழாவின்போது பொங்கல் வைத்தல், குதிரையில் மந்தாநாயக்கரை கோவிலுக்கு அழைத்து வருதல், மாவிளக்கு எடுத்தல், வாணவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. 3-ம் நாளான நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், பக்தர்கள் அலகு குத்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செய்து அம்மனை வழிபட்டனர். பின்னர் மாலை படுகளம் போடுதல் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இரவு மஞ்சள் நீராட்டுடன் குள்ளாயி அம்மன் திருக்கரகம் வீதி உலாவாக எடுத்து வந்து கோவில் கிணற்றில் விடப்பட்டது. இந்த திருவிழாவில் கொசூர் கிராம விழா கமிட்டியாளர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் உள்பட சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story