முருகன் கோவில்களில் சித்ரா பவுர்ணமி விழா
விருத்தாசலம் பகுதி முருகன் கோவில்களில் சித்ரா பவுா்ணமி விழாவையொட்டி பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று நேர்த்திகடன் செய்து வழிபட்டனர்
விருத்தாசலம்
சுப்பிரமணியர்கோவில்
விருத்தாசலத்தை அடுத்த சித்தேரிக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி-தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, வீதி உலா நடைபெற்று வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக காவடி திருவிழா நேற்று நடந்தது. முன்னதாக வள்ளி- தெய்வானை உடனுறை பாலசுப்பிரமணியருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி அருள்பாலிக்க ஆராதனை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து மேள,தாள இசையுடன் பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று சாமிக்கு நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பாலமுருகன் கோவில்
விருத்தாசலம் பெரிய கண்டியாங்குப்பம் வேப்பிலை மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள பாலமுருகன் சன்னிதானத்தில் சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காவடி மற்றும் செடல் திருவிழா நடைபெற்றது. இதில் விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் இருந்து மேள, தாள இசையுடன் பக்தர்கள் காவடி, பால் குடங்கள் சுமந்தும், அலகு குத்தியும், பறக்கும் காவடியில் அந்தரத்தில் தொங்கியபடியும் ஊர்வலமாக புறப்பட்டு சன்னதி வீதி, கடைவீதி, பாலக்கரை, ஆலடி ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சாமிக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் நிறைவாக இன்று(சனிக்கிழமை) இடும்பன் பூஜை மற்றும் அன்னதானம் நடக்கிறது.