குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
கூடலூர் நகராட்சி பகுதியில் குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர் 2-ம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு லோயர்கேம்பில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து குழாய்கள் மூலம் கூடலூரில் உள்ள தரைவழி தண்ணீர்தொட்டி மற்றும் மேல்நிலை தொட்டிகளில் குடிநீரை தேக்கி வைத்து ஒவ்வொரு வார்டு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கூடலூர் பகுதியில் குடிநீரில் முறையாக குளோரின் கலக்காமல் வினியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். மேலும் தற்போது இந்தப் பகுதிகளில் கோடைமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் மாசு அடைந்து வருகிறது. இந்த தண்ணீரை குடித்தால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கூடலூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து, குளோரின் கலந்த குடிநீரை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.