முறையான பராமரிப்பில்லாமல் சேதமடைந்த கரிகால் சோழன் நடைபாதை


தஞ்சையின் மையப்பகுதியில் முறையான பராமரிப்பில்லாமல் சேதமடைந்த கரிகால் சோழன் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சையின் மையப்பகுதியில் முறையான பராமரிப்பில்லாமல் சேதமடைந்த கரிகால் சோழன் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரிகால் சோழன் நடைபாதை

கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் எனப்படும் புதுஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்துவிடப்படும். இதில் புதுஆறு தஞ்சை நகரின் மையப்பகுதி வழியாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வழியாக புதுக்கோட்டை வரை செல்கிறது.

தஞ்சை பெரிய கோவில் அருகே உள்ள புதுஆற்றுப்பாலத்தில் இருந்து இர்வீன்பாலம் வரை ஆற்றின் இருகரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைக்கு கரிகால்சோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பராமரிப்பு

2013-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த இந்த நடைபாதையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காக நடைபாதையில் இரும்பு கம்பியிலான தடுப்பு கம்பிகள், இருக்கைகள், மின்விளக்குகள் ஆகியவைகளும் அமைக்கப்பட்டிருந்தன.

மக்கள் வரி பணத்தால் போடப்பட்ட இந்த நடைபாதை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாததால் அசுத்தமான நிலையில் காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அந்த வழியாக செல்வதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டனர்.

இரும்பு கம்பிகள் திருட்டு

மேலும் கரிகால் சோழன் நடைபாதையில் விளக்குகள் திருடப்பட்டுள்ளன. பல இடங்களில் இரும்பு கம்பிகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால் தடுப்புகள் இன்றி ஆபத்தான நிலையில் நடைபாதை உள்ளது. எனவே திருடப்பட்ட இடங்களில் கம்பிகளை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுப்பதுடன், மின்விளக்குகளையும் புதிதாக பொருத்தி எரிய வைக்க வேண்டும். கரிகால்சோழன் நடைபாதையை முழுவதும் சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.


Next Story