கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல்-புனரமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பார்த்தல்-புனரமைக்க நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள சொந்த கட்டிடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்படி திட்டத்தின் கீழ் பின்வருமாறு கூடுதல் பணி மேற்கொள்ளவும், கட்டிடத்தின் வயதிற்கேற்ப மானிய தொகை உயர்த்தியும் அரசு ஆணையிடப்பட்டுள்ளது. கூடுதலாக மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் வருமாறு:- தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல். தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப உயர்த்தப்பட்டுள்ள மானிய தொகை விவரம் வருமாறு:- 10-15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 15-20 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழு பெறப்படும் விண்ணப்பங்களை அனைத்து உரிய ஆவணங்களுடன் பரிசீலித்து, கிறிஸ்தவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு மேற்கொள்ளப்படும். கட்டிடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்து உரிய முன்மொழிவுகளுடன் சிறுபான்மையினர் நல இயக்குனருக்கு நிதியுதவி வேண்டி பரிந்துரை செய்யப்படும். நிதியுதவி 2 தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக்கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் செலுத்தப்படும். கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதலுக்கான விண்ணப்ப படிவம் பெற மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது www.bcmbcmw@tn.gov.in என்ற இணையதள முகவரியிலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவம் மற்றும் சான்றிதழை பூர்த்தி செய்து, அதில் கோரப்பட்டுள்ள ஆவணங்களோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும், என்று கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.