தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி


தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க நிதியுதவி வழங்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசு நிதியுதவி வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தேவாலயங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்கள் பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுடன் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் கூடுதலாக மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் நிதியுதவி பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவாலயம் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட இடம் ஆகியவை பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவால யகட்டத்தின் வயது ஆகியவற்றை கருத்திற்கொண்டு 10-15 வருடம் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமும், 15-20 வருடமாக இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரையும், 20 வருடத்துக்கு மேல் இருந்தால் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும். சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதிஉதவியும் பெற்றிருக்க கூடாது.

ஆவணங்கள்

விண்ணப்பத்துடன் தேவாலயம் கட்டடத்திற்கு உள்ளாட்சிஅமைப்புகளிடம் இருந்து வரைபடம் அனுமதி ஒப்புதல் பெறப்பட்ட ஆணைநகல் மற்றும் தேவாலயம் கட்டப்பட்டநாள், தேவாலயகட்டடத்தின் ஸ்திரத்தன்மைசான்று உள்ளாட்சிஅமைப்பு பொறியாளர்களிடம் இருந்து பெறப்பட்டிருத்தல் அவசியம்..தேவாலயம் முகப்பு தோற்றம் மற்றும் பழுது ஏற்பட்டுள்ள பகுதியின் புகைப்படங்கள், தேவாலயம் சுயாதீனம் வகையாயிருப்பின் அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற்ற சான்று இணைத்தல் வேண்டும்.தேவாலயம் வங்கிகணக்கு எண், வங்கியின் பெயர், கிளை, ஐ.எப்.எஸ்.சி, மற்றும் எம்.ஐ.சி.ஆர் எண்கள் விவரம் ஆகிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழை இணையதள முகவரி www.bcmbcmw@tn.gov.inவெளியிடப்பட்டு உள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கையை பூர்த்தி செய்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story