கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க அரசு நிதியுதவி அதிகரிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க அரசு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களை சீரமைக்க அரசு நிதியுதவி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை கிடைக்கும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கிறிஸ்தவ தேவாலயங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வரும் கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகளுடன் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிவறை வசதி அமைத்தல், குடிநீர் வசதிகள் உருவாக்குதல் போன்ற பணிகள் கூடுதலாக மேற்கொள்ளுவதற்கு நிதிஉதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிதியுதவியை பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக் கட்டடத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தேவாலயம் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட இடம் ஆகியவை பதிவுத்துறையில் பதிவு செய்திருத்தல் வேண்டும். தேவாலயத்தில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றை கருத்தில் கொண்டு 10 முதல் 15 ஆண்டுகள் வரை இருப்பின் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும், 15 முதல் 20 ஆண்டுகளாக இருப்பின் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், 20 ஆண்டுக்கு மேல் இருப்பின் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாகவும் நிதியுதவி உயர்த்தி வழங்கப்படும். தேவாலயத்தில் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டில் இருந்து எந்தவித நிதிஉதவியும் பெற்றிருத்தல் கூடாது.

ஆவணங்கள்

விண்ணப்பத்துடன் தேவாலயம் கட்டிடத்துக்கு உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து வரைபடம் அனுமதி ஒப்புதல் பெறப்பட்ட ஆணை நகல் மற்றும் தேவாலயம் கட்டப்பட்ட நாள் குறித்த ஆவணம். தேவாலய கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை சான்று உள்ளாட்சி அமைப்பு பொறியாளர்களிடம் இருந்து பெறப்பட்டிருத்தல் அவசியம். தேவாலயம் முகப்பு தோற்றம் மற்றும் பழுது ஏற்பட்டுள்ள பகுதியின் புகைப்படங்கள். தேவாலயம் சுயாதீனம் வகையாக இருப்பின் அதன் செயல்பாடுகள் குறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற்ற சான்று இணைத்தல் வேண்டும். தேவாலயம் வங்கி கணக்கு எண், வங்கியின் பெயர், கிளை, ஐ.எப்.எஸ்.சி எண், எம்.ஐ.சி.ஆர் எண் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களை விண்ணப்பித்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது. அதனை படியிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்தத் திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.


Next Story