கிறிஸ்தவர்கள் சாலை மறியல்
காட்டுமன்னார்கோவில் அருகே கிறிஸ்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி மேற்கு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இதை சென்னையை சேர்ந்த நோவா செல்வகுமார் என்பவர் குடும்பத்துடன் தங்கி நிர்வகித்து வருகிறார்.
பிரார்த்தனை செய்து வந்த கட்டிடம் உள்ள இடத்தை நோவா செல்வகுமார், வேறொருவரிடம் விற்பனை செய்தார். இந்த இடத்தை வாங்கியவர், அந்த கட்டிடத்தை இடிக்க முயன்றார். இதற்கு கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பிரார்த்தனை செய்ய கிறிஸ்தவர்கள், அந்த கட்டிடத்திற்கு வந்தனர். அப்போது அங்கிருந்த நோவா செல்வகுமாருடன் கிறிஸ்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்தததும் காட்டுமன்னார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிறிஸ்தவர்கள் கூறுகையில், 23 ஆண்டுளாக பிரார்த்தனை செய்து வந்த இந்த இடத்தை எங்களுக்கே தெரியாமல் நோவா செல்வகுமார் விற்று விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
அதற்கு நோவா செல்வகுமார், இது எனக்கு சொந்தமான இடம். என் குடும்ப சூழ்நிலை காரணமாக இடத்தை விற்பனை செய்துள்ளேன் என்றார்.
இதை கேட்ட போலீசார், இதுதொடர்பாக நீதிமன்றம் மூலம் தீர்வு காணுமாறு கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.