கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க தயாராகும் கிறிஸ்தவர்கள்


கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க தயாராகும் கிறிஸ்தவர்கள்
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க கிறிஸ்தவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். வீடுகள்தோறும் ஸ்டார் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்க கிறிஸ்தவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். வீடுகள்தோறும் ஸ்டார் அலங்காரம் செய்யும் பணிகள் தொடங்கியது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கிறிஸ்துமஸ். கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் இயேசு கிறிஸ்து மண்ணுலகில் அவதரித்த தினத்தை கொண்டாடும் விதமாக இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 25-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையையொட்டி கிறிஸ்தவர்கள் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கிவிடுவார்கள். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் பண்டிகையை விமரிசையாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சம் நீங்கியிருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

ஆயத்தப்பணிகள்

இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்கு இன்றும் 22 நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக வீடுகள்தோறும் வர்ணஜாலங்கள் காட்டும் வண்ண, வண்ண ஸ்டார்களால் தோரணங்கள் அமைக்கும் பணிகளிலும், இயேசுவின் பிறப்பை விளக்கும் வகையிலான குடில்கள் அமைக்கும் பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். கிறிஸ்தவ ஆலயங்கள், அமைப்புகள் சார்பில் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று பஜனை பாடல்கள் பாடும் நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். பஜனை பாடல்களைப் பொறுத்தவரையில் சில பகுதிகளில் ஊர்வலமாகச் சென்றும், சில பகுதிகளில் வாகனங்களில் சென்றும் பாடி வருகிறார்கள்.

களைகட்டியது

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடைவீதிகளில் பல வண்ணங்களில், புதுப்புது வடிவங்களில் ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. ஸ்டார் விற்பனை செய்யும் கடைகளில் ஸ்டார்கள் தோரணங்களாக தொங்க விடப்பட்டுள்ளன. இதேபோல் குடில்களில் வைக்கப்படும் சொரூபங்களும் பல வடிவங்களில் விற்பனைக்காக வைத்துள்ளனர். எனவே கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது என்று கூறலாம்.

இன்னும் சில தினங்கள் கழித்து கிறிஸ்தவர்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று ஜவுளிக்கடைகளில் புத்தாடைகள் வாங்குவதிலும், பேக்கரிகளில் கேக் மற்றும் இனிப்பு வகைகளுக்கு ஆர்டர் கொடுப்பதிலும் ஈடுபடுவார்கள். குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையும், அதைத்தொடர்ந்து வரக்கூடிய புத்தாண்டு பண்டிகையையும் வரவேற்க தயாராகி விட்டார்கள்.


Next Story