கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி கீத ஆராதனை


கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி கீத ஆராதனை
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தாமஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி கீத ஆராதனை நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டி தாமஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி கீத ஆராதனை நடைபெற்றது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

இயேசு கிறிஸ்து பிறந்து தினமான டிசம்பர் 25-ந் தேதி ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இயேசுவின் பிறப்பை முன்னறிவிக்கும் வகையில், கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார்களை தொங்க விடுவது வழக்கம்.

அதேபோல் மாட்டுத்தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் வீடுகளில் குடில்களும் அமைப்பார்கள். கடந்த சில நாட்களாக பண்டிகை கால கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள், கேக் தயாரிக்கும் நிகழ்ச்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சி.எஸ்.ஐ., ரோமன் கத்தோலிக்க திருச்சபைகள் சார்பில் கேரல்கள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சபை மக்களின் வீடுகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பாடல்களை பாடி சென்று, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

கீத ஆராதனை

இந்தநிலையில் ஊட்டியில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சி.எஸ்.ஐ. புனித தாமஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மெழுகுவர்த்தி கீத ஆராதனை நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆலயத்தில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, ஏற்கனவே வைக்கப்பட்டு இருந்த மெழுகுவர்த்திகளில் ஒளி ஏற்றப்பட்டது. தொடர்ந்து பாடகர் குழுவினர் இயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் வகையில் பாடல்களை பாடினர்.

முடிவில் கிறிஸ்தவர்கள் அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பாடல் பாடினர். மேலும் மாண்டஸ் புயலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு பிரார்த்தனை ஏறெடுக்கப்பட்டது. இந்த ஆராதனையில் கிறிஸ்தவர்கள் திரளானோர் ஒரே மாதிரி உடையணிந்து கலந்துகொண்டனர். பின்னர் ஐக்கிய விருந்து நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாமஸ் ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.


Next Story