தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கோலாகலம்
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்த கேரல் ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் குவிந்து வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்த கேரல் ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் குவிந்து வழிபாடு நடத்தினர்.
கிறிஸ்துமஸ்
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஏசுகிறிஸ்து பிறப்பை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகள், இளைஞர்கள், ஆலயங்கள் சார்பில் கேரல் பவனி நடத்தப்பட்டது. விதவிதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கிறிஸ்து பிறப்பை குறிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
கேரல் வாகனங்கள்
இந்த கேரல் வாகனங்கள் முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்தன. பவனியில் வந்த இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் மகிழ்ச்சியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினர். சில ஆலயங்களில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்தவர்கள் பங்கு மக்களின் வீடுகளுக்கு சென்று இனிப்பு மற்றும் பரிசுகளையும் வழங்கி வாழ்த்தினர்.
சின்னக்கோவில்
நேற்று முன்தினம் நள்ளிரவில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுத்திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பனிமயமாதா ஆலயம்
இதேபோன்று தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தில் பங்குதந்தை குமாரராஜா தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயத்தில் துணை பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மேலும் ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இரவில் நடந்த கேரல் ஊர்வலத்தில் மின்விளக்குகளில் ஜொலித்த மான், விமானம், பறக்கும் குதிரை போன்ற உருவங்கள் பங்கேற்றன. இந்த ஊர்வலத்தில் பல ஆயிரம் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இரவில் மக்கள் ஆலயங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். இதை முன்னிட்டு ஆலயப்பகுதிகளிலும், கேரல் ஊர்வம் சென் பகுதிளிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.