பனை ஓலையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சரித்திரப்பதிவுகள்
பனை ஓலையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் சரித்திரப்பதிவுகள் பற்றி அரசு அருங்காட்சியகத்தில் அரிய தகவல்கள் உள்ளது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
புள்ளி விவரங்கள்
தொண்டைமான் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட புதுக்கோட்டை சமஸ்தானம் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். அக்காலத்தில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியாரின் பார்வைக்காக புள்ளி விவரங்களை பனை ஓலையில் தயார் செய்துள்ளனர். கடந்த 1813-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்த பனை ஓலைகளில் உள்ள அரிய தகவல்கள் பற்றி அரசு அருங்காட்சியகத்தில் ஏற்கனவே பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இத்தொகுப்பு 1,625 ஓலைச்சுவடி ஏடுகளை கொண்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குட்பட்ட கிராமங்கள் வாரியான புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள முக்கிய தகவல்கள் பற்றி வருமாறு:- புதுக்கோட்டை சமஸ்தான பகுதிகள் தாலுகா, மாகாணம், கசுப்பா, கிராமம் என பிரிக்கப்பட்டிருந்தது. வடமுகம், தென்முகம், மேல்முகம், கீழாநிலை, மேல நிலை ஆகிய தாலுக்காக்கள் இருந்தன. 2,627 கிராமங்கள் இருந்தன.
சரித்திரப்பதிவுகள்
ஆலங்குடி, வாராப்பூர், மிரட்டுநிலை, பொற்பனைக்கோட்டை, திருமயம், பிரான்மலை, கீழாநிலை, அரிமளம் ஆகிய ஊர்களில் கோட்டைகள் இருந்தன. இவை மண் கோட்டையாகும். பட்டு மற்றும் பருத்தி நெசவு தொழில் சிறப்பாக நடைபெற்றது. 2,794 ஊரணிகள், 2,603 பாசன கண்மாய்கள், 382 ஓட்டு வீடுகள், 574 கோவில்கள், 30 ஆயிரத்து 859 கூரை வீடுகள் இருந்தன. 65 ஆயிரத்து 505 தென்னை மரங்கள், 33 ஆயிரத்து 663 பனை மரங்கள், 15 ஆயிரத்து 310 புளிய மரங்கள், 10 ஆயிரத்து 264 மா மரங்கள், 12 ஆயிரத்து 745 பலா மரங்கள், இலுப்பை, நெல்லி மரங்களும் இருந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளி விவரங்கள் அனைத்தையும் பனை ஓலையில் எழுதி வைக்கப்பட்டுள்ள விவரம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். அந்த காலத்தில் புள்ளி விவரங்களை மிக துல்லியமாக சேகரித்து, அதனை பத்திரமாக பாதுகாக்கும் வகையில் பனை ஓலையில் எழுதி வைக்கப்பட்டுள்ள சரித்திரப்பதிவு இன்றைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.