சினிமா உதவி இயக்குனர் மர்மச்சாவு -போலீசார் விசாரணை


சினிமா உதவி இயக்குனர் மர்மச்சாவு -போலீசார் விசாரணை
x

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஸ்டூடியோவில் திரைப்பட பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த சினிமா உதவி இயக்குனர் திடீரென மயங்கி விழுந்து மர்மச்சாவு அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியது.

விருகம்பாக்கம்,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 25). இவர் நெசப்பாக்கத்தில் கடந்த 2 வருடமாக வாடகை வீட்டில் தனது நண்பருடன் தங்கி சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விருகம்பாக்கம், சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள ஸ்டூடியோவில் திரைப்பட எடிட்டிங் பணியில் மும்முரமாக ஈடுபட்டு கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு திடீரென மயங்கி கீழே விழுந்த அவரை அருகில் இருந்த நண்பர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராமகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராமகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஸ்டூடியோவில் சினிமா உதவி இயக்குனர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story